சென்னையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைதியாகவும், எவ்வதி அசம்பாவிதங்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.
நேற்று (08.10.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் அஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மிகச்சிறப்பாக பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர். இதனால் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானம் உள்புறம், வெளிப்புறம், மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் குழுவினர் சிறப்பாக பணிபுரிந்து, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மேலும், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் ஆர். சுதாகர் தலைமையில், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொண்டுள்ள சாலைகளில் அயராது போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொண்டு, போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாத வண்ணம், பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது தவிர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட நிறங்கள் அடிப்படையிலான வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சிறப்பாக பணிபுரிந்தனர்.
கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்த பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்ததின்பேரில், நேற்று (08.10.2023) சிறப்பாக பணிபுரிந்த அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.