முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த கடலூரைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 13.12.2023 அன்று ஒரு புகார் அளித்தார். அதில், யாரோ அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் அழைத்து தமிழக முதலமைச்சர் அவர்களின் உதவியாளர் (P.A.) போல் பேசி மிரட்டி வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தார். அதன்படி சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டது. போலீசார் நடத்திய மத்திய குற்றப்பி விசாரணையில் முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த நபர் பெயர் சிவசுப்ரமணியன் (34) என்பதும், கடலூர் பொன்னாஞ்சிட்டு, தில்லை என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மரக்காணம் அருகில் அவரை 14ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிவசுப்ரமணியன் மீது பாண்டிச்சேரி மற்றும் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் மோசடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த வாரம் ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போன் பேசிவிட்டு தருவதாக கூறி செல்போனை திருடிக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது. இவர் இவ்வாறு செல்போன்களை திருடிச் சென்று பலரிடம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உதவியாளர் (PA) போல் பேசி மிரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் சிவசுப்ரமணியன் நேற்று (15.12.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் செல்போன்களை கொடுப்பதை தவிர்க்குமாறும், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சந்தேகத்திற்குரிய பயணிகளைப் பற்றி காவல்துறை உதவி எண் 100-க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் சைபர் கிரைம் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், பொதுமக்கள் 1930 என்ற எண்ணை அணுகுமாறு அல்லது ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.