சென்னை மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கவிழா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பங்கேற்று கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியினைத் தொடங்கி வைத்து பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், கிரிக்கெட் பயிற்சியளிக்கும் ஜெனரேசன் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ப்ரீத்தி அஸ்வினிடமும், கால்பந்து பயிற்சியளிக்கும் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர்கள் பிரியா கோபாலன் மற்றும் சந்தியா ராஜன் ஆகியோரிடமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் வழங்கினார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், இந்திய நாட்டிற்கான பிரெஞ்சு நாட்டின் துணைத் தூதர் லிசா டால்பட் பாரே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.