தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்து 7,80,000- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் திருமணி (65). இவர் 26.07.2023 அன்று தனது வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டுக்காரரான அதே பகுதியை சேர்ந்த பில்லாயூஸ் மகன் ஜெய்ஸ் (34) என்பவரிடம் கொடுத்து விட்டு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார். மீண்டும் நேற்று (01.11.2023) திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டில் பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இது குறித்து திருமணி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திருமணியின் பக்கத்து வீட்டுக்காரர் ஜெய்ஸ், தனது மனைவி ஆஷா (28)வுடன் சேர்ந்து திருமணியின் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனை யடுத்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஜெய்ஸ் மற்றும் அவரது மனைவி ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 7,80,000- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். மேலும் இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.