சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல் பணிபுரிந்த 37 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர காவல்துறையில் சிறந்த பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சென்னை அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் பரணிதரண் தலைமையில் முதல்நிலைக் காவலர்கள் ரமேஷ், ஜெபராஜ், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் பாலமுருகன், உலகநாதன், முதல்நிலைக் காவலர் எட்வின் தீபக், காவலர்கள் மணிவண்ணன், சரத்பாபு ஆகியோருக்கு இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல் பணிக்காக நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அயானவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மிக்ஜாம் புயலின்போது, மழைநீர் வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்தும், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் குழுவினர் 28 ஆண்டுகள் தலைறைவாகயிருந்த கொலை குற்றவாளியை ஓடிசா மாநிலம் சென்று கைது செய்தும், புழல் காவல் நிலைய குழுவினர் புழல் சிறையிலிருந்த தப்பிய குற்றவாளியை பெங்களூர் சென்று கைது செய்தும், மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் காணாமல் போன சிறுமியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தும் சிறந்த காவல் பணிபுரிந்தனர்.
மேலும் நீலாங்கரை காவல் நிலைய காவல் குழுவினர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, சென்னை அக்கரை பகுதியில் மழைநீர் வெள்ளத்தில் தவித்த சுமார் 75 குடும்பங்களை மீட்டும் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தும், புனித தோமையர் மலை, ஒரு விரல் ரேகை பிரிவு காவல் குழுவினர், NAFIS என்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன் நேபாள நாட்டு குற்றவாளி மற்றும் திருட்டு வழக்கு குற்றவாளியை கண்டறிந்து, கைது செய்ய உதவியும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.