கோயம்பேடு பேருந்து முனையத்தில் பெண் தவறவிட்ட 6 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்புலஷ்மி, 44 என்பவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, தூத்துக்குடியிலிருந்து அவரது கணவருடன் பேருந்தில் ஏறி நேற்று (24.11.2023) காலை சென்னை, கோயம்பேடு பேருந்து முனையம் இறங்கினார். பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவர் பையில் வைத்திருந்த 6 சவரன் எடை கொண்ட 2 தங்க சங்கிலிகள் மற்றும் பணம் ரூ.5,575/- அடங்கிய மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, சுப்புலஷ்மி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு பேருந்து முனைய ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார், 45 என்பவர் நேற்று (24.11.2023) காலை, கோயம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் ஒரு மணிபர்சு இருந்ததை கண்டெடுத்து பார்த்ததில், அதில் தங்க நகைகள் மற்றும் பணம் இருந்தது தெரியவந்ததால், ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார் மணிபர்சை CMBT காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகார்தாரர் சுப்புலஷ்மியை அழைத்து அவர் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை செய்ததில், சசிகுமார் கொடுத்த தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய மணிபர்சு புகார்தாரர் சுப்புலஷ்மியுடையது என தெரியவந்தது. அதன்பேரில், உரிய சட்ட நடவடிக்கைகளின்படி மேற்படி 6 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5,575- அடங்கிய மணிபர்சு, கோயம்பேடு உதவி ஆணையாளர் முன்னிலையில் சுப்புலஷ்மியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கிடந்த தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய மணிபர்சை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பின்னர் உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் சசிகுமாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.