4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இன்று புகார் மனுக்களை நேரில் பெற்றார். மேலும் புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (11.10.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 24 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காவல் ஆணையாளர் குறை தீர் முகாமில் அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா பிள்ளை, (வய 75) என்பவர் தனது வீட்டு மனை கட்ட பணம் கொடுத்த நிலையில் முழுமையாக முடிக்காமல் பணமும் தராமல் ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்தார். அதே போல கேகே நகர், நேரு அவின்யூவைச் சேர்ந்த மீராபாய் சந்திரன் (70) என்பவர் தனது வீட்டின் பின்புறம் வசிப்பவர் தனது வீட்டிற்குள் அவரது கட்டிடத்தை எழுப்பி, தனது வீட்டின் பக்கம் கழிவு நீர் தொட்டியை அமைத்து தொந்தரவு கொடுப்பதாக புகார் அளித்தார்.

மேலும் மோகன் சர்மா (76) என்பவர் தன்னை தாக்கிய நபர்கள் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர். இவர்கள் உள்பட 4 மூத்த குடிமக்கள் புகார் மனுக்கள் மீது, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின் போது துணை ஆணையாளர் சீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments (0)
Add Comment