“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி இன்று (29.08.2023) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யும் நோக்கத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ள காவல் ஆணையாளர் சங்கர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று கொரட்டூர் காவல் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது பெட்டிக்கடைகளில் ஹான்ஸ், குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அவற்றை கமிஷனர் சங்கர் நேரடியாக பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார் ஆவடி காவல் மாவட்ட பகுதியிலும், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மணலி காவல் சரகத்திலும், ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையாளர் SRMC காவல் சரகத்திலும் அதிரடி குட்கா சோதனைகள் மேற்கொண்டனர். போதைப் பொருட்களுக்கு எதிரான இந்த திடீர் அதிரடி சோதனை ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 58 இடங்களில் நடைபெற்றது. இந்தச் சோதனையில் பள்ளிக்கு அருகாமையில் கூல் லிப் ஹான்ஸ் போன்றவற்றை விற்பனை செய்த 58 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.