கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம் தொடர்பான விஷயத்தில் மிகுந்த அக்கரை உள்ளவர். அவர் சென்னை மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு போலீஸ் துணைக்கமிஷனராக பணியாற்றிய போது தனது அலுவலகத்திற்கு வெளியே பார்வையாளர்கள் அறையில் மினி லைப்ரரியை உருவாக்கினார். தன்னை சந்திக்க வரும் நபர்கள் காத்திருக்கும் அந்த சிறிய நேரத்தில் புத்தகங்கள் படித்து நல்ல முறையில் செலவிட்டு அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் விளைவு இன்று சென்னை நகரில் உள்ள காவல் அதிகாரிகள் அலுவலக பார்வையாளர்கள் காத்திருப்பு அறைகளில் புத்தகங்கள் இடம் பெறத் தவறுவதில்லை.
தற்போது பாலகிருஷ்ணன் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பதவி ஏற்றதும் கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவிகள் அறிவை வளர்த்து பயன் பெறும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தெரு ஓர லைப்ரரிகளை உருவாக்குவதில் பெரிய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். குழந்தைகள் விரும்பி படிக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், நல்லொழுக்கம் குறித்த அனைத்து விதமான புத்தகங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். ஏராளமான மாணவ மாணவிகள் அந்த லைப்ரரிகளுக்குச் சென்று புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனர்.
இதனைக் கண்ட கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆகர்ஷானா 2 ஆயிரம் புத்தகங்களை தானே சேகரித்துக் கொண்டு வந்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். இதனால் தெருஓர லைப்ரரிகள் பெருகி வருகின்றன. கோவை மாநகரில் தெரு ஓர லைப்ரரிகள் பெருகி பள்ளி மாணவர்கள் அதில் சென்று படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனின் மற்றொரு முயற்சியாக அவர் தனது அனுபவங்கள் அடங்கிய புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்ற புத்தகத்தை பாலகிருஷ்ணன் இம்மாதம் 27ம் (27.8.2023) தேதியன்று வெளியிடுகிறார். மேலும் ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ்ணன் மற்றும் அத்ருத் சுப்பையா ஆகியோர் இணைந்து எழுதிய ‘‘FASCINATING FLAGS FOR FUN’’ என்ற நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.
இந்த இரண்டு நூல்களில் வெளியீட்டு விழாவும் கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பிகே கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் நடைபெறுகிறது. இந்தப் புத்தகம் வெளியிடுவதன் மூலம் ஐபிஎஸ் அதிகாரியும், போலீஸ் கமிஷனருமான பாலகிருஷ்ணன் எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்த விருக்கிறார். நிச்சயம் அதில் வாசிப்பாளர்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும் என சமூக ஆர்வலர்கள், புத்தக விரும்பிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.