சென்னை பெருநகர காவல் துறையினரின் நல்வழிபடுத்தும் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவினை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சரால் 20, 21-, 2022 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி அரசாணை நிலை எண் 492. உள் (காவல்-XIII) துறை, நாள்:16.11.2021-ன் படி வெளியிடப்பட்டு, முலமைச்சர் ஸ்டாலின் 24.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில். “சிற்பி” (SIRPI -Students In Responsible Police Initiatives) என்ற மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிற்பி திட்டத்தின் மூலம், சிற்பி மாணவ, மாணவியருக்கு பாடத்திட்ட புத்தகங்கள், சீருடைகள் (2 எண்ணிக்கை) வழங்கப்பட்டு, 40 வாரம் பயிற்சி வகுப்புகள் மற்றும் 8 கல்விச் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி வகுப்புகள் நல்லமுறையில் முடிக்கப்பட்டு, சிற்பி திட்டம் நிறைவு பெறுகிறது.
நேற்று (26.06.2023) நேரு உள்விளையாட்டரங்கில் சிற்பி திட்ட நிறைவு விழாவை தொடங்கி வைத்து, சிற்பி திட்டத்தில் அங்கம் வகிக்கும் 5,000 மாணவ, மாணவியர்களின் பயிற்சிகள் மற்றும் கடந்து வந்த சாதனை பயணங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிற்பி கீதம் என்ற சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலை வெளியிட்டார். விழாவில் பேசிய முதல்வர், ‘மு.க.ஸ்டாலின் இருக்கிறேன்; நீங்கள் செய்வீர்களா?’ -என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் சிற்பி மாணவர்களுக்கு காவல்துறை மற்றும் ஆசிரியர்கள் மூலம் கவாத்து, போக்குவரத்து விதிகள், கணினி வழிக் குற்றங்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், நல்லொழுக்கம், நெகிழி ஒழிப்பு, மாசு கட்டுப்பாடு, ஒளி மற்றும் ஒலி மாசு, நாட்டுப்பற்று, போதைப் பழக்கம் தடுக்கும் முறைகள், தனிப்பட்ட சுகாதாரம், இயற்கையை பேணுதல், யோகா, மனிதநலம், தற்காப்பு, தேசப்பற்று, அரசு வேலைக்கு செல்லத் தேவையான படிப்புகள், குதிரைப்படை, மோப்ப நாய் பிரிவு, இயற்கை விவசாயம், சாதனை படைப்பது, நல்ல தொடுகை, தீய தொடுகை மற்றும் உதவி தொலைபேசி எண்கள் போன்ற வகுப்புகள் அதன் நிபுணத்துவ நிபுணர்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் சிற்பி மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் யோகா வகுப்பில் கலந்து கொண்டு திரிகோண ஆசணம் செய்ததற்கு உலக இளம் சாதனையாளர் சாதனை விருது (World Young Achievers Record), தமிழ்நாடு இளம் சாதனையாளர் சாதனை விருது (Tamil Nadu Young Achievers Record), உலக ரெக்கார்டு யூனியன் (World Record Union) ஆகிய உலக சாதனை விருதுகளை பெற்றனர். மேலும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 5,000 சிற்பி மாணவ ,மாணவிகளை கல்வி சுற்றுலாவாக, சென்னை எழும்பூர் முதல் வண்டலூர் வரை சிறப்பு ரயில்களில் அழைத்துச் சென்று காவல் உயர் பயிற்சியகம் அழைத்துச் சென்று வந்ததற்கு உலக சாதனை விருது பெற்றனர்.
மேலும் இயற்கையை பேணும் விதமாக 5,000 மாணவ, மாணவிகளும் 5,00,000 (ஐந்து இலட்சம்) விதைபந்துகள் தயார் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்ததுடன், 5,000 மரக்கன்றுகள் நட்டு அசத்தியதற்காக, Indian Records Academy மற்றும் Asian Book of Records ஆகியோரிடமிருந்து உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளனர்.
சிற்பி திட்டத்தை பெருமைபடுத்தும் விதமாக, கடந்த 26.01.2023 அன்று காமராஜர் சாலையில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழா அணிவகுப்பில், சிற்பி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு மிடுக்கான நடைபயின்று அனைவர் கவனத்தையும் ஈர்த்ததுடன், சிற்பி மாணவிகள் குழுவினர் சிறந்த படைத் தலைவருக்கான விருதை பெற்று பெருமை சேர்த்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் அதிகாரிகள், சிற்பி திட்டத்தின் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.