சென்னையில் இரவு மராத்தான் போட்டி 2ம் பாகம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் 2ம் தேதி நடக்கிறது

போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை முன்னிட்டு, ஆவடி இரவு மாரத்தான் 2வது பாகம் ஆவடியில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார திட்டத்தை, பொதுமக்களிடையே எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்தி, இளைஞர்களை போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுத்து, வாழ்வியல் முறையில் நல்வழிபடுத்தவும், ஆரோக்கியம் மற்றும் உடலை பேணி காப்பதற்காக, விளையாட்டில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தலின்பேரில் சென்னை பெருநகர காவல்துறை (GCP), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் (Avadi Commissionerate) இணைந்து, ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2 என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்துகின்றனர்.

இரவு மாரத்தான் போட்டிகள் மிகக் குறைவாக நடத்தப்படுகிறது. இது போன்ற மாரத்தான் போட்டி நிகழ்வை நடத்துவதன் மூலம் சென்னை பெருநகரம் இரவு மாரத்தான் வரைபடத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் மாலை நேரம் ஓடுவதற்கு சிறந்த நேரம் ஆகும். அதன்பேரில், இம்மாதம் 02.10.2023 அன்று மாலை 6.00 மணிக்கு, ஆவடி, வேல் டெக் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஆவடி இரவு மாரத்தான் போட்டியின் 2ம் பாகம் (Avadi Night Marathon-2023, Edition-2) நடைபெறுகிறது. 1/2 மாரத்தான் (21 கி.மீ.), 10 கி.மீ., 5 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் நடைபெறும் இரவு மாரத்தான் போட்டி வேல் டெக் கல்லூரியில் தொடங்கி, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நெமில்லிச்சேரி சுங்கச்சாவடி வரை மேற்படி 3 பிரிவுகளின் தூரத்தை கடந்து மீண்டும் வேல் டெக் கல்லூரியில் முடிவடையும் வகையில் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாரத்தான் பந்தய நேரத்தில் கனரக வாகனங்கள் முன்னரே திருப்பிவிடப்பட்டு, எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான ஓட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும், அவசர மருத்துவி உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூர மாரத்தன் பிரிவுக்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 கி.மீ. மற்றும் 21 கி.மீ. தூர மாரத்தன் பிரிவுகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோரும், என சுமார் 6,000 பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். மேலும், மேற்படி இரவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு 02.10.2022 அன்று ஆவடி இரவு மாரத்தான் போட்டி-2022 போட்டியை அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அப்போதைய காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். சென்னை மற்றும் ஆவடி காவல்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வேல் டெக் கல்லூரி, தி ஹிந்து, சென்னை ரன்னர்ஸ், வேலம்மாள் நெக்சஸ், CPCL நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் மெரிடியன் மருத்துவமனை ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இப்போட்டியில் பொதுமக்கள் கலந்து கொண்டு, போதையில்லா தமிழ்நாடு திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment