காவல் நலத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்த சென்னை கிழக்கு மண்டல காவல்துறை

குடியரசு தினவிழாவன்று பங்கேற்ற தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்திகள் மற்றும் சென்னை நகர காவல்துறையின் நலத்திட்டங்கள் குறித்து சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

சென்னை நகர காவல்துறையின் செயல்பாடுகளை பள்ளி மாணவர்களிடையே கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை போலீஸ் மியூசியத்தில் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் தர்மராஜன் தலைமையில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 26.01.2024 அன்று, சென்னை, காமராஜர் சாலையில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழாவில் ஒவ்வொரு அரசு துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக அரசுதுறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக சென்றன. அவை பள்ளி மாணவர்களின் பார்வைக்காக எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (29.01.2024) சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் அகாடமி பள்ளி, எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி, பட்டினப்பாக்கம் ராஜலஷ்மி மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் அருங்காட்சியகத்துக்கு வரவழைக்கப்பட்டு அலங்கார ஊர்திகளை பார்வையிட்டனர்.

சென்னை நகர கிழக்கு மண்டல இணை ஆணையாளர் தர்மராஜன், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் காவல் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். மேலும் சமீபத்தில் சென்னை நகர

காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS), பருந்து செயலி (குற்றவாளிகளின் விவரங்கள் அறியும் செயலி), நிவாரணம் செயலி (பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலி), மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள “பந்தம்” திட்டம், FRS செயலி (முகத்தை கொண்டு குற்றவாளிகளை அடையாளும் காணும் செயலி), வீரா வாகனம் (சாலை விபத்து மீட்பு மற்றும் விடுவிப்பு வாகனம்) மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களின் 50வது ஆண்டு சிறப்பு ஆகியவை குறித்து விளக்கமாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் சுற்றி காண்பிக்கப்பட்டு, காவல்துறையின் ஆயுதங்கள், சீருடை, பணிகள், சிறப்புகள், சாதனைகள், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேற்படி தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியில் 2ம் இடத்திற்கான பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Comments (0)
Add Comment