சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் இப்ராஹிமின் மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும் 12 காவல் மாவட்ட காவல் அதிகாரிகள் குழுவினர் நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை திருமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் நேற்று (06.10.2025) காலை திருமங்கலம், பாடிக்குப்பம் மெயின் ரோடு, காமராஜர் தெரு சந்திப்பு அருகே கண்காணித்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த காரில் இருந்த நபர்கள் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, கொக்கைன் வகை போதைப்பொருள், கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் கூலிப் பாக்கெட்டுகள் வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (21), ரசீத் அலி (25) என்பதும், அப்துல் ரகுமான் வேலூர் பாஜக பிரமுகர் இப்ராஹிம் என்பவரதுமகன் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 7 கிராம் கொக்கைன் வகை போதைப்பொருள், 20 கிராம் கஞ்சா, கூலிப் பாக்கெட்டுகள்-21, 4 செல்போன்கள், கையடக்க கஞ்சா அறவை இயந்திரம், கையடக்க எடை இயந்திரம், 1 கைக்கடிகாரம், கஞ்சா புகைக்க பயன்படுத்தும் கண்ணாடி குடுவை, STASH PRO பேப்பர் 4 பாக்கெட்டுகள், மற்றும் ஸ்கார்பியோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.