அரபி மொழியில் தயார் செய்யப்பட்ட பாடல் இசைக்காணொலியை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிடவுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நீதிபதிகள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, பாரசீகம் மற்றும் உருது துறையில் இணை பேராசிரியராக பணியாற்றுபவர் முனைவர் ஜாகிர் உசேன், இவர் பாரதியாரின் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்ற பாடலை அரபி மொழியில் மொழிபெயர்த்து இசைக் காணொளியாக தயாரித்துள்ளார்.
அதன் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் உள்ள பவள விழா அரங்கில் வருகிற 8.9.2023 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் யா. மணிகண்டன் தலைமை தாங்குகிறார். இசைக் காணொளியை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி இசை காணொளியை பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதி அரசர்கள் ஜி.எம். அக்பர் அலி, கே.பி.கே. வாசுகி, முன்னாள் மாவட்ட நீதிபதியும் தற்போது தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ள அ. முகமது ஜியாவுதீன், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் கோ. பழனி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி, கவிஞர் சல்மா, இந்த இசை காணொ ளிக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் உபைது குன்னக்காவு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முன்னதாக “பாருக்குள்ள நல்ல நாடு” இசை காணொளியின் இயக்குனர் முனைவர் அ. ஜாகிர் உசேன் வரவேற்று பேசுகிறார், முடிவில் சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, பாரசீகம், உருது துறையின் உதவி பேராசிரியர் முனைவர் அமானுல்லா நன்றி கூறுகிறார். பேராசிரியர் ஹாமிம் முஸ்தபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு,பாரசீகம் மற்றும் உருதுத்துறை, தமிழ் மொழித் துறை, தமிழ் இலக்கியத்துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து வருகிறார்கள்.