சென்னை நகர காவல்துறை ‘அவள்’ திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவ கல்லூரியில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் 1,500 மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு‘‘ முன்னிட்டு, 17.03.2023 அன்று, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக ‘‘அவள்‘‘ (AVAL – Avoid Violence through Awareness and Learning) என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன்கள், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் வன்முறையைக் குறைக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும் அவள் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் இயங்கும் பாதுகாப்பு நகரத்திட்டங்களில் ஒன்றான திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இன்று (27.11.2023), நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரியில் ‘‘பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு‘‘ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர்கிரைம் துணை ஆணையாளர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சைபர் குற்றங்களின் கள நிலவரம் குறித்து உரையாற்றினார். மேலும் சைபர் பாதுகாப்பு துறைசார் வல்லுநரும் எழுத்தாளருமான திரு.வினோத் ஆறுமுகம் பங்கேற்று சைபர் குற்றங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த பயிலரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே, அவள் திட்டம் மூலம் பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வானொலி, தொலைக்காட்சி, குறுஞ்செய்திகள், குறும்படங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னையிலுள்ள ஹிட்டாச்சி நிறுவன ஊழியர்கள் சுமார் 1,000 நபர்களுக்கு பணியிட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.