கரூர் மாவட்டத்தில் போக்சோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நீதிமன்றத்தில் 3 நாட்களில் 4 வழக்குகளில் கடும் தண்டனை பெற்றுத்தந்து காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர்.
வெங்கமேடு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்
11.07.2019 அன்று கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் வெண்ணைமலையைச் சேர்ந்த மனோ @ மனோரஞ்சித், (26), ஸ்ரீதர், (30), திருச்சி ரயில் நகர் நிக்சன், (30), மணிகண்டன் என்கிற பேட்டரி பாலாஜி, (௩௫) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட வழக்கு கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து 04.03.2026 அன்று இந்த வழக்கில் மேற்கண்ட 4 எதிரிகளுக்கு ஆயள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போக்சோ குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல்
கடந்த 2025 ஆம் ஆண்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் (POCSO) 11.06.2025 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகானந்தம் (46), என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.03.2026 ஆம் தேதி வழக்கின் எதிரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. அதனையடுத்து குற்றனாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு குற்றவாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
2025 ஆம் வருடம் கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 18.06.2025 அன்று போக்சோ பாலியல் வன்கொடுமை சட்டம் (POCSO) பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளி கரூர், புளியம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 05.03.2026 ஆம் தேதி எதிரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இரட்டைக் கொலையாளிக்கு இரட்டை ஆயுள்
மேலும் 2024 ஆம் வருடம் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் 09.11.2024-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தென்காசியைச் சேர்ந்த செல்வகணேஷ் (48) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 06.03.2026 ஆம் தேதி மேலே கண்ட எதிரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
எஸ்பி பாராட்டு
மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்தும், இறுதி அறிக்கை தயார் செய்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சிறை தண்டனை பெற திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகளை கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா வெகுவாக பாராட்டினார்.