தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் 9,634 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17,330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிணக்கு இணங்க போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையிலும் நடத்திய அதிரடி போதை ஒழிப்புச் சோதனையில் மாநிலம் முழுவதும் 8 பெண்கள் உட்பட 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 386 கிலோ கஞ்சா, 85 கிராம் மெத்தம்பெடமின், 690 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டத்திற்கும் பிரத்யேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் மது விலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி அலுவலகம் எச்சரித்துள்ளது.