சென்னை நகரில் போதைக் கடத்தல் கும்பலை கள்ளத்துப்பாக்கியுடன் கூண்டோடு கைது செய்த நுண்ணறிவுப் பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜனின் தனிப்படைக்கு கமிஷனர் அருண் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
போதையில்லா தமிழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கிய திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை ஒழிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள், மற்றும் பயன்படுத்துபவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (Anti Narcotic Intelligence Unit – ANIU) துவக்கப்பட்டு, போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நுண்ணறிவுப்பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில், துணைக்கமிஷனர் சக்திவேல் தலைமையில் உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் சென்னை நகரம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 04.06.2025 அன்று, ANIU போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனர் மனோஜ்குமார் தலைமையிலான காவல் குழுவினர், சென்னை ஆர்.கே நகர் காவல்குழுவினருடன் ஒருங்கிணைந்து, IOC, ரயில்வே யார்டு அருகே கண்காணித்தனர். அப்போது அங்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் முகமது அசார், ரியாஸ் கான், பர்வேஸ் உசேன், அப்பாஸ் அலி, மணிப்பூரைச்சேர்ந்தி மீனா (எ) அமீனா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம் பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 3 ஐபோன் உட்பட 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இளையராஜா என்பவரும் கடந்த 05.06.2025 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
போதைக் கும்பலை திறமையாக கைது செய்த ANIU உதவிக்கமிஷனர் மனோஜ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஜானி செல்லப்பா, ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் பொன் பாண்டியன், ஜெயகுமார், தலைமைக் காவலர்கள் சுந்தரமூர்த்தி, முதல்நிலைக்காவலர் மணிகண்டன், காவலர்கள் ஹரி, சுதாகர், .ராஜா, கண்ணன், பெண்காவலர் கோபிகா ஆகியோரை கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது நுண்ணறிவுப்பிரிவு இணைக்கமிஷனர் தர்மராஜன், துணைக்கமிஷனர் சக்திவேல் உடனிருந்தனர்