சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின் பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (11.02.2024) மாலை, கொடுங்கையூர், பாப்பாத்தி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி இடத்தில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட செபஸ்டின், 59, பாப்பாத்தி அம்மன் கோயில் தெரு, கொடுங்கையூர், 2.முத்து, 40, தென்றல் நகர், கொடுங்கையூர், பரசுராமன், 47, உட்பட 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ. 10,350 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 6 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.