சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லையான செம்மஞ்சேரியில் 60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். 02.02.2024 -ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு எழில் நகர், பெரும்பாக்கம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதனையடுத்து அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து திருநங்கைகள் மணிகண்டன் @ அப்ரணா (27), குமரேசன் @ சுஜி (32), அப்பு @ ஆனந்தி (36), பிரவின் @ ரதி (35), ராஜேஷ் @ அபி (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அங்கு போலீசார் சோதனை நடத்தி ரூ. 6 லட்சம் மதிப்புள்ள, 60 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவினை அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து வாங்கிவந்து எழில் நகர், செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனை செய்து வந்ததாக கூறினர். செம்மஞ்சேரி போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.