சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 44 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (09.08.2023)மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு 9வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த மடிப்பாக்கம் ராம்நகரைச் சேர்ந்த ராஜேஷ் குமார், 38 என்பவரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து 44 கிலோ எடை கொண்ட கூலிப், ஸ்வாகத், சைனி ஆகிய குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ராஜேஷ்குமார் மீது ஏற்கனவே மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு குட்கா வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ராஜேஷ் குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (09.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.