மாதவரத்தில் காரில் கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மாதவரம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (11.10.2023), வானகரம் சோதனை சாவடி அருகில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் வந்த 2 நபர்கள் தப்பியோடிவிட்டனர். போலீசார் மேற்படி காரை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் 400 கிலோ எடை கொண்ட ஹான்ஸ். கூலிப், ஸ்வாகத் உட்பட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 காரை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாகி உள்ள 2 குற்றவாளிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதே போல மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (11.10.2023) மாதவரம் MRH சாலையில் குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 47. 250 கிலோ எடை கொண்ட ஹான்ஸ். கூலிப், ஸ்வாகத் உட்பட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி செல்வராஜ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)
Add Comment