தீனா கலர் லேப் நிறுவனத்தில் சுமார் ரூ 20 கோடி வரை மோசடி செய்த 3 ஊழியர்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, -524 கிராம் தங்க நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல தீனா கலா லேப்பின் மேலாளர் ஜெயவேல் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘தமிழகம் முழவதும் போட்டோ லேப் மற்றும் கேமரா தொழிலில் கடந்த 35 வருடங்களாக தீனா கலர் லேப் சுமார் 52 கிளைகளுடன் இயங்கி வருகிறது. சென்னை எல்லீஸ் ரோடு மற்றும் கோயம்பத்தூர் கிளைகளில் பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் கௌதம் மற்றும் இந்நிறுவனத்தின் தலைமை அலுவலக கணக்காளரான கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் இணைந்து சுமார் ரூபாய் 20 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவிக்கமிஷனர் சிவா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் கோபாலகிருஷ்ணன், கௌதம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் பணத்தை ஏமாற்றி கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை மின்மயா நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40), கோவை கவுதம் (30), கிருஷ்ணமூர்த்தி (42) ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 524 கிராம் தங்க நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்கள், MG Hector கார் -1 மற்றும் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.