சென்னை, கொடுங்கையூர் பகுதியில் 234 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (19.09.2023) கொடுங்கையூர், திருத்தங்கல் நாடார் காலேஜ் ரோட்டில் கண்காணித்து அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த பரமசிவம் (29), மாரியப்பன் (23), மிக்கல் (எ) பிலவேந்திரன், 19 ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 234 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், ஸ்வாகத் உட்பட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 செல்போன் மற்றும் ரொக்கம் ரூ. 2 லட்சத்து 71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப்பின்னர் நேற்று (19.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.