நீலாங்கரையில் கஞ்சா பூ வைத்திருந்த 2 பேர் கைது

சென்னை, நீலாங்கரை பகுதியில் ஒ.ஜி. குஷ் (OG KUSH) என்ற கஞ்சா பூ வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 103 கிராம் ஒ.ஜி. குஷ் (OG KUSH) பணம் ரூ. 4,63,300- மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, J-8 நீலாங்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (30.08.2023) மாலை, கொட்டிவாக்கம், பகுதியிலுள்ள ஒரு ஹோட்டல் அறையை கண்காணித்தபோது, அங்குள்ள அறையில் தங்கியிருந்த 2 நபர்கள் ஓ.ஜி.குஷ் எனப்படும் கஞ்சா பூ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சட்ட விரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த நீலாங்கரை, மரக்காயர் நகர் 7வது தெருவைச் சேர்ந்த ஜொனாதன், 25, கொலகத்தாவைச் சேர்ந்த ஷாதாஸ் ஆலம், 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 103 கிராம் எடை கொண்ட ஒ.ஜி. குஷ் (OG Kush) என்ற கஞ்சா பூ, பணம் ரூ. 4,63,300 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் ஜொனாதன் மற்றும் ஷாதாஸ் ஆலம் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர், நேற்று (30.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment