கொடுங்கையூர் பகுதியில் போலீசார் 135 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (17.08.2023) கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், பத்மாவதி தெருவில் கண்காணித்தபோது, அங்குள்ள ஒரு குடோனில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கொடுங்கையூர், எழில்நகரைச் சேர்ந்த செல்லப்பா, 55 என்பவரை கைது செய்தனர். மேலும் குடோனில் இருந்து 135 கிலோ எடை கொண்ட கூலிப், ஸ்வாகத், சைனி ஆகிய குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி செல்லப்பா விசாரணைக்குப் பின்னர் இன்று (18.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.